கரட்டுப்பதி மலைவாழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு

உடுமலையை அடுத்துள்ள கரட்டுப்பதி செட்டில்மென்ட் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

உடுமலையை அடுத்துள்ள கரட்டுப்பதி செட்டில்மென்ட் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்துக்கு உள்பட்ட கரட்டுப்பதி செட்டில்மென்டில் சுமார் 80 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், இந்த செட்டில்மென்ட் கிராமத்துக்கு நீண்ட காலமாக குடிநீர் வசதி இல்லை. இதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6 லட்சம் செலவில் ஒரு தண்ணீர் தொட்டி அமைத்துக் கொடுத்து அதற்கு தேவையான குழாய்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. ஆனால், குடிநீர் மட்டும் வரவில்லை.
இது குறித்து மலைவாழ் மக்கள் வனத் துறை, ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனாலும், மலைவாழ் மக்களுக்கு குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றன.
இந்நிலையில் கரட்டுப்பதி செட்டில்மென்ட்டைச் சேர்ந்து 50 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் திங்கள்கிழமை உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஒரு ஆண்டாக எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. மேலும், எங்களது செட்டில்மென்டுக்கு அருகேயே அமராவதி அணை இருந்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளோம். நாங்கள் யாரும் வாக்களிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com