சுடச்சுட

  

  அதிமுக-திமுக நேருக்கு நேர் போட்டிப் பிரசாரம்: உடுமலையில் பரபரப்பு

  By DIN  |   Published on : 17th April 2019 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அதிமுகவினரும் திமுகவினரும் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் போட்டிப் பிரசாரம் மேற்கொண்டதால் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 
  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 18 நடைபெறுகிறது. இந்நிலையில், ஏப்ரல் 16 (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதலே அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் உடுமலை நகரம் முழுவதும் வீதி, வீதியாக பேரணியாகச் சென்று வாக்குகளை சேகரித்தனர். அதிமுக சார்பில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
  திமுக சார்பில் நகரச் செயலாளர் மத்தீன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். இந்நிலையில், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சியினரும் மாலை 4 மணி அளவில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே வந்து சேர்ந்தனர்.
  அப்போது, உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம், மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன், மடத்துக்குளம் எம்.எல்.ஏ. இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். 
  இந்நிலையில், அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு பிரசாரம் மேற்கொள்ள முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மாலை 5 மணி முதல் 6 மணி வரை அதிமுக வினர் பிரசாரம் மேற்கொள்ளலாம் அதுவரை பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டதால் அமைதி ஏற்பட்டது.
  இதைத் தொடர்ந்து, திமுகவினர் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பிரசாரம் செய்து விட்டுக் கலைந்து சென்றனர். அதன்பின் மாலை 5 மணிக்கு மேல் அதிமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர்.
  பரபரப்பாக காணப்படும் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அதிமுக, திமுக கட்சினர் ஒரே நேரத்தில் பிரசாரம் மேற்கொண்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai