அமராவதி அணையை தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
By DIN | Published On : 21st April 2019 04:06 AM | Last Updated : 21st April 2019 04:06 AM | அ+அ அ- |

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையை தூர்வார தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை.
90 அடி உயரமுள்ள இந்த அணை 1958 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அமராவதி அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ள இந்த அணைக்கு பாம்பாறு, தேனாறு, சின்னாறு போன்ற ஆறுகள் நீராதாரமாக விளங்கி வருகின்றன.
இந்த அணையின் முழுக் கொள்ளளவு 4 டிஎம்சி என பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் அணை நிரம்பும்போது உண்மையான நீர் இருப்பு 3 டிஎம்சி ஆக தான் உள்ளது. கடந்த ஆண்டுகளில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் பலமுறை அணை நிரம்பியது. அப்போது நீரை தேக்கி வைக்க முடியாமல் அணையின் பாதுகாப்பு கருதி பலமுறை தண்ணீரை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது.
முறையாக அணை தூர்வாரப்பட்டிருந்தால் 1 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக இருப்பு வைத்துக் கொள்ள முடியும். தற்போது கோடை காலத்தில் நீர் பற்றாக்குறையை சமாளிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அணையின் உள்பகுதியில் நீண்டகாலமாக சுமார் 10 அடி ஆழத்துக்கு சேரும் சகதியுமாக உள்ளது.
தற்போது அணயின் நீர்மட்டம் சரிந்து விட்ட நிலையில் அணையின் உள்புறம் மண்மேடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் அமராவதி அணையை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
அமராவதி அணைப்பகுதியை தூர்வாரினால் வருங்காலத்தில் கூடுதலாக 1 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக இருப்பு வைக்க முடியும். இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு நீர் பங்கீடு செய்ய முடியும். தமிழக அரசு தூர்வார உத்தரவிட்டால் விவசாயிகளே தங்களது சொந்த செலவில் தூர்வாரிக் கொள்வோம். தமிழக அரசு அதற்கு அனுமதி கொடுத்தால் மட்டும் போதும். ஏனெனில் அணையில் உள்ள மகுடி மண் நல்ல வளமான மண். அதை எடுத்து விவசாய நிலங்களுக்கு உபயோகப்படுத்தி கொள்வோம். ஆகவே தமிழக அரசு அமராவதி அணையை தூர்வார உத்தரவிட வேண்டும் என்றனர்.