சாலை விபத்தில் பெண் பலி
By DIN | Published On : 21st April 2019 04:05 AM | Last Updated : 21st April 2019 04:05 AM | அ+அ அ- |

அவிநாசி சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே சாலை விபத்தில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் அருகே உள்ள பிஜுலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பேபிராஜ் (40). இவரது மனைவி கமலம்மாள் (34). இவர்கள் திருப்பூர் நல்லூர் முத்தணம்பாளையத்தில் வசித்துக் கொண்டு, இங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, சொந்த ஊரான பிஜுலவாடி கிராமத்துக்கு சென்று விட்டு, இருவரும், திருப்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அவிநாசி சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, இவர்களுக்கு பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம், மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலைதடுமாறி பேபிராஜும், கமலம்மாளும் கீழே விழுந்தனர். அப்போது அவ்வழியாக அதிக வேகமாக வந்த லாரி, கமலம்மாள் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பேபிராஜ் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.