அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 09th August 2019 09:30 AM | Last Updated : 09th August 2019 09:30 AM | அ+அ அ- |

திருப்பூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, கல்லூரியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழில் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையத்தளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளன. இங்கு சேரும் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, மதிவண்டி, பேருந்து பயணச் சலுகை அட்டை, சீருடைகள், பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், மாதந்திர உதவித் தொகையாக ரூ. 500 ஆகியவை வழங்கப்படும். திருப்பூர், தாராபுரம் சாலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இதற்காக விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.