விவசாயிகள் ஆர்ப்பாட்டம் எதிரொலி: ஆத்துப்பாளையம் தடுப்பணைக்குத் தண்ணீர் திறக்க நடவடிக்கை

வெள்ளக்கோவிலை அடுத்த சின்னமுத்தூர் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டதை அடுத்து ஆத்துப்பாளையம் தடுப்பணைக்குத் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவிலை அடுத்த சின்னமுத்தூர் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டதை அடுத்து ஆத்துப்பாளையம் தடுப்பணைக்குத் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 சின்னமுத்தூரில் 1992 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நொய்யல் தடுப்பணை உள்ளது. இந்தத் தடுப்பணையில் இருந்து 10 கி.மீ.
 தொலைவுக்கு கால்வாய் வெட்டி, அதன் மூலம் செல்லும் தண்ணீர் தேங்கும் வகையில் கரூர் மாவட்டம், கார்வழி ஊராட்சிக்கு உள்பட்ட ஆத்துப்பாளையத்தில் மற்றொரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
 இத்தடுப்பணை மூலம் கார்வழி, துக்காச்சி, அஞ்சூர், தென்னிலை கீழ்பாகம், அத்திப்பாளையம், குப்பம், புன்னம்சத்திரம், வேலாயுதம்பாளையம், புஞ்சை புகளூர், மண்மங்கலம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ஏறத்தாழ 21 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இப்பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிக்கும்.
 ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணை கால்வாய் மூலம் 2000, 2004 ஆம் ஆண்டு தண்ணீர்
 திறக்கப்பட்டது. பின்னர், திருப்பூர் சாயப்பட்டறைகளின் சாயக் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் அதிக அளவில் கலந்துவந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும், அப்பகுதி விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தண்ணீர் திறக்க தடை உத்தரவு பெற்றனர்.
 இந்நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளான கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வருவதால் ஆத்துப்பாளையம் தடுப்பணைக்குத் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கரூர் மாவட்ட விவசாயிகள் சின்னமுத்தூர் தடுப்பணைக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இது குறித்து வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளர் மு.ஜெயபாலன் தலைமையிலான போலீஸார் பொதுப் பணித் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காங்கயம் கோட்ட பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவிப் பொறியாளர் விமலநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து நீதிமன்ற தடையுத்தரவு இருப்பதால் தண்ணீர் திறக்க முடியாதெனத் தெரிவித்தனர். விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு வந்த காங்கயம் வட்டாட்சியர் (பொ) தேவராஜ், மாவட்ட ஆட்சியர் அனுமதியின்பேரில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com