சுதந்திர தின விழா கொண்டாட்டம்: ஊராட்சியின் வளர்ச்சிக்கு கிராம சபைக் கூட்டம் ஊன்றுகோலாக உள்ளது: மாவட்ட ஆட்சியர்

ஊராட்சிகளில் அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபை கூட்டம் ஊன்றுகோலாக உள்ளது  என்று ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார். 

ஊராட்சிகளில் அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபை கூட்டம் ஊன்றுகோலாக உள்ளது  என்று ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார். 
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையத்தில் சுதந்திர தின விழாவையொட்டி கிராம சபைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்துப் பேசியதாவது: 
கிராம சபைக் கூட்டத்தின் நோக்கம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு திட்டமிடுதல் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் கருத்துருக்கள் பகிர்ந்து கொள்வதாகும். ஊராட்சியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்து செயல்படும்போது அந்த ஊராட்சியின் அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபை கூட்டம் ஊன்றுகோலாக உள்ளது. 
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாக்காளரும் தங்களது பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை சரிபார்த்தல், திருத்தம் செய்தல், இறப்பு மற்றும் குடி பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குதல் போன்ற பணிகளை தாங்களே செய்து கொள்ளும் வகையில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.  
இந்தப் பணிக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் சரிபார்க்கும் பணியின்போது கேட்கும் விவரங்களை பொதுமக்கள் அளிக்க வேண்டும் என்றார். முன்னதாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் ஆட்சியர் கலந்து கொண்டார். 
கூட்டத்தில், திருப்பூர் கோட்டாட்சியர் செண்பகவள்ளி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், அவிநாசி வட்டாட்சியர் வாணி ஜெகதாம்பாள், திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், மகுடீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com