அரிசி மண்டியில் ரூ.27 ஆயிரம் திருட்டு
By DIN | Published On : 19th August 2019 10:22 AM | Last Updated : 19th August 2019 10:22 AM | அ+அ அ- |

திருப்பூரில் பெண் வேடமிட்டு அரிசி மண்டியில் ரூ.27 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர், கொங்கு பிரதான சாலை, எம்.எஸ். நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (32). இவர், தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாநகரச் செயலாளராக உள்ளார். இவர், அதேபகுதியில் அரிசி மண்டி வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரமேஷ்குமார் வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்து அரிசி மண்டியைப் பூட்டிவிட்டுச் சென்றார். பின்னர் சனிக்கிழமை காலை வந்து அரிசி மண்டியைத் திறந்துள்ளார்.
அப்போது, உள்ளே இருந்த மேஜை டிரா திறந்து கிடந்தது. மேலும், கடையின் மேற்கூரை சிமென்ட் சீட் உடைக்கப்பட்டிருந்தது. கடையினுள் இருந்த பொருள்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மர்ம நபர் யாரோ மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்து கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.27 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், கடையில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த விடியோவில் மர்ம நபர் ஒருவர் சுடிதார் அணிந்து முகத்தை மூடியபடி அரிசி மண்டியின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே இறங்கியுள்ளார். பின்னர் டிராவில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இந்தக் காட்சியை வைத்து மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.