நத்தக்காடையூர் அருகே தற்காலிக சாலை அகற்றம்: இன்று முதல் வாகனப் போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 19th August 2019 10:21 AM | Last Updated : 19th August 2019 10:21 AM | அ+அ அ- |

ஈரோடு -பழனி நெடுஞ்சாலையில் நத்தக்காடையூர் அருகே வெள்ளியங்காட்டில் புதிய பாலம் கட்டப்பட்டு வரும் இடத்தில் வாய்க்காலில் தண்ணீர் செல்ல ஏதுவாக தற்காலிக பாலம் அகற்றப்படுவதால் அப்பகுதியில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) முதல் வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளியங்காட்டில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்ட தற்காலிக சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த 16-ஆம் தேதி கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தண்ணீர் செல்ல ஏதுவாக தற்காலிக சாலை அகற்றப்பட்டு அந்த வழியே வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கயம் கோட்ட நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் முத்துக்குமரன், நபார்டு கிராம சாலைகள் உதவிப் பொறியாளர் சசிக்குமார் ஆகியோர் கூறியதாவது:
வெள்ளியங்காட்டில் புதிய பாலம் கட்டும் பணி இதுவரை முடிவடையவில்லை. இந்நிலையில் கீழ்பவானி பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்த வழியே திங்கள்கிழமை முதல் வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி ஈரோடு - பழனி மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் நத்தக்காடையூர் - கண்ணபுரம் சாலையில் பழையவெள்ளியம்பாளையம், முள்வாடிப்பாளையம், சித்தம்பலம் - நான்குசாலை வழியாக முள்ளிப்புரம் பிரதான சாலைக்கு சென்று, தொடர்ந்து நெடுஞ்சாலையில் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மறு மார்க்கமாக பழனி - ஈரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் இதே வழியிலேயே செல்ல வேண்டும். இதற்காக நத்தக்காடையூர் - திருப்பூர், கண்ணபுரம் சாலை பிரிவு, முள்ளிப்புரம் ஆகிய இடங்களில் பிரதான சாலையின் நடுவில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து
ஒழுங்குபடுத்தப்படும் என்றனர்.