உயர் மின் கோபுரம் திட்டம்: விவசாயிகளைக் கைது செய்ததற்குமார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

பல்லடம் அருகே உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்ட நில அளவீட்டுப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து

பல்லடம் அருகே உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்ட நில அளவீட்டுப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அக்கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
 விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எனினும் பல்லடம் சாலையூர், காளியப்பன்கவுண்டன்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க வருவாய்த் துறையினர், பவர் கிரிட் அமைப்பினர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் விளை நிலங்களில் அத்துமீறி நுழைந்து நில அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டது கண்டனத்துக்கு உரியது.
 அரசு நிர்வாகம் எந்த மாற்று ஆலோசனையையும் பரிசீலிக்காமல் இப்பணியை மேற்கொள்வது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். சூரிய சக்தி, காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை புதை வடமாகவும், கடல் வழியாகவும் இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்ல  பெரும் நிறுவனத்தினர் திட்டமிடுகின்றனர்.  அண்டை நாட்டுக்கும், தொலைதூர நாடுகளுக்கும் இதுபோன்ற திட்டம் சாத்தியம் என்றால், உள்ளூரில் விவசாயிகள் பாதிக்காதபடி சாலையோரமாக புதைவடமாக மின் பாதையை அமைக்க முடியாதா? 
 விவசாயிகளை அலட்சியப்படுத்தும் அரசு, காவல் துறையை கொண்டு வன்முறை மூலம் மிரட்டிப் பணிய வைத்து விளை நிலங்களில் மின்கோபுரம் அமைக்க முயற்சிக்கிறது.  எனவே இந்த நடவடிக்கையைக் கைவிட்டு விட்டு விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த அரசு முன் வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com