உடுமலையில் தக்காளி விவசாயிகளுக்கு தனியாக சந்தை: அமைச்சர்

உடுமலையில் தக்காளி விவசாயிகளுக்காக பிரத்யோகமாக ஒரு சந்தை அமைக்கப்படும் என்று கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

உடுமலையில் தக்காளி விவசாயிகளுக்காக பிரத்யோகமாக ஒரு சந்தை அமைக்கப்படும் என்று கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 
உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான தினசரி காய்கறி சந்தையில் 200க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. நகராட்சி மூலமாக ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு தனி நபரின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்தக் காய்கறி சந்தையில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், உள்ளே பல்வேறு இடங்களில் நகராட்சி அனுமதி இல்லாமல் கடைகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் கூறப்பட்டன.
இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாகவும் கூறப்பட்டது. இந்தப் புகாரைத் தொடர்ந்து கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் காய்கறி சந்தையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
இதில் ஏலம் எடுத்தவர் நகராட்சி அனுமதி இல்லாமல் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நகராட்சி அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டு வந்த கடைகளை உடனடியாக அகற்ற அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும், பொதுமக்கள் வசதியாக நடக்கவும், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இல்லாமல் செல்லவும் வழித் தடங்களை அமைக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
உடுமலை நகராட்சிக்குச் சொந்தமான காய்கறி சந்தையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வாரச் சந்தையில் காலியாக உள்ள இடங்களை விதிமுறைப்படி கடைகளை அமைக்கவும், பொதுமக்கள் நடமாட இடையூறாக இருந்த கடைகளை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக உடுமலை வட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிக அளவு உள்ளது. எனவே, காய்கறி சந்தையில் தக்காளி விவசாயிகளுக்காக தனியாக ஒரு சந்தை அமைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், தக்காளி அதிக விளைச்சல் ஏற்படும் சமயத்தில் விலை கிடைக்காதபோது தக்காளியை சாஸ் ஆக மாற்றவும், அதை விற்பனைக்கு பயன்படுத்தவும் ஒரு நடமாடும் வாகனம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நவீன இயந்திரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள அந்த வாகனம் உடுமலைக்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடுமலையில் உள்ள இந்தக் காய்கறி சந்தைக்குள் அந்த வாகனம் வரும்போது அதற்கென தனியாக சாலை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். இதனால் தக்காளி விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றார்.
நகராட்சிப் பொறியாளர் தங்கராஜ் மற்றும் நகரமைப்பு அலுவலர்கள்,  விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com