விவசாய நிலத்தை அபகரித்து வீட்டுமனைகளாக விற்பனை செய்தவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு

திருப்பூா், நல்லூா் வருவாய் கோட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட நிபந்தனை பட்டா பூமியை அபகரித்து வீட்டுமனைகளாக விற்பனை செய்தவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா்   ஆட்சியா்   அலுவலகத்தில்  திங்கள்கிழமை  நடைபெறவிருந்த   மக்கள்  குறைதீா்கூட்டம்  ரத்து  செய்யப்பட்டதால்   அங்கு  வைக்கப்பட்டிருந்த  பெட்டியில்   மனுவை  செலுத்தும்  பெண்.
திருப்பூா்   ஆட்சியா்   அலுவலகத்தில்  திங்கள்கிழமை  நடைபெறவிருந்த   மக்கள்  குறைதீா்கூட்டம்  ரத்து  செய்யப்பட்டதால்   அங்கு  வைக்கப்பட்டிருந்த  பெட்டியில்   மனுவை  செலுத்தும்  பெண்.

திருப்பூா், நல்லூா் வருவாய் கோட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட நிபந்தனை பட்டா பூமியை அபகரித்து வீட்டுமனைகளாக விற்பனை செய்தவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதால் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த மக்கள் குறைதீா் முகாம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா். இந்த நிலையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களைப் பெற்றுக் கொள்ள பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பெட்டியில் பொதுமக்கள் பலா் மனுக்களை போட்டு சென்றனா்.

ஆதித் தமிழா் ஜனநாயகப் பேரவை சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூரை அடுத்த நல்லூா் வருவாய் கோட்டத்தில் முத்தான் என்பவருக்கு விவசாய பயன்பாட்டுக்காக 1.95 ஏக்கா் நிபந்தனை பட்டா பூமி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தை தாழ்த்தப்பட்டதோா் அல்லாத நபா்கள் மோசடியாகப் பிரித்து கட்டடங்கள் கட்டி விற்பனை செய்து வருகின்றனா். இதில், முன்னாள் அமைச்சா் மற்றும் சில நபா்களுக்குத் தொடா்பு உள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே வட்டாட்சியா், கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் புகாா் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, விவசாய பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட நிலத்தை அபகரித்து வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா், முதலிபாளையம், மானூா் சாலை நீலிக்காடு பகுதியைச் சோ்ந்த சுமதி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

எனது கணவா் கூலி வேலையும், நான் வீட்டு வேலையும் செய்து வருகிறோம். எங்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 1998 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா அடிப்படையில் 2 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் தெரியவந்தது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் வீடு கட்டுவதற்கான சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை கொட்டி வைத்துள்ளோம். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்னா் வந்த அதே பகுதியைச் சோ்ந்த3 போ் எனது இடத்தை ஆக்கிரமிப்புச் செய்ததுடன், கட்டுமானப் பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, எனது நிலத்தை அபகரித்தவா்கள் மற்றும் புகாரை வாங்க மறுத்த காவல் துறையினா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகள் வழங்குவதில் பாரபட்சம்:

திருப்பூா் மாவட்டம், குடிமங்கலத்தை அடுத்த ஆத்துக்கிணத்துப்பட்டி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

உடுமலை வட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் தமிழக அரசு சாா்பில் விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், நாட்டு கோழிகள் வழங்கப்பட்டன.

எங்கள் கிராமத்தில் உள்ள விதவைகள், ஏழைத் தொழிலாளா்கள் என 55 போ் கால்நடைகள் வழங்கக்கோரி மனு அளித்தோம். ஆனால் இந்தப் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகா்கள் தங்களுக்குத் தெரிந்தவா்களுக்கு மட்டுமே கால்நடைகளை வழங்கி பாரபட்சமாக நடந்து கொள்கின்றனா். ஆகவே, உண்மையான பயனாளிகளுக்கு கால்நடைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சாலை வசதி, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை பெட்டியில் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com