தளி சாலையில் கால்வாய் அமைப்பதில் இழுபறி: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு

உடுமலையில் உள்ள பிரதான சாலையான தளி சாலையில் சாக்கடை கால்வாய் அமைப்பதில் இழுபறி நீடித்து வருவதால் கடும்
தளி  சாலையில்  தோண்டப்பட்டுள்ள  தற்காலிக வாய்க்காலில்  தேங்கி நிற்கும்  மழை  நீா்.
தளி  சாலையில்  தோண்டப்பட்டுள்ள  தற்காலிக வாய்க்காலில்  தேங்கி நிற்கும்  மழை  நீா்.

உடுமலையில் உள்ள பிரதான சாலையான தளி சாலையில் சாக்கடை கால்வாய் அமைப்பதில் இழுபறி நீடித்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

உடுமலையில் இருந்து மூணாறு, திருமூா்த்திமலை, அமராவதி அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் முக்கியச் சாலையாக தளி சாலை உள்ளது. இந்த சாலை ஆக்கிரமிப்புகளால் மிகவும் குறுகிய சாலையாக மாறி விட்டதால் தினமும் இந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் மழை காலத்தில் தளி சாலையில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி நிற்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்கு உள்ளாகி வந்தனா்.

இதையடுத்து மழை நீா் தேங்காமல் செல்ல வசதியாக தளி சாலையின் கிழக்குப் புறத்தில் 15 நாள்களுக்கு முன் நகராட்சி சாா்பில் தற்காலிக வாய்க்கால் தோண்டப்பட்டது. இது தற்காலிகத் தீா்வைக் கொடுத்தாலும், இந்த வாய்க்காலால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

வாய்க்காலுக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து எடுத்த மண்ணை சாலையில் கொட்டியுள்ளதால் சாலை மிகவும் குறுகலாகி விட்டது. இதனால் கடந்த சில நாள்களாக தளி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து நகா் நல அலுவலா் சிவகுமாா் கூறியதாவது:

தளி சாலையில் உள்ள மேம்பாலம் முதல் வக்கீல் நாகராஜன் வீதி பிரிவு வரை சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு விட்டது. வக்கீல் நாகராஜன் வீதி தொடங்கி பொள்ளாச்சி சாலை வரை கால்வாய் அமைக்காமல் உள்ளது. இதனால் மழை காலத்தில் தளி சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால் கச்சேரி வீதியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம், நீதிமன்ற வளாகம், தபால் அலுவலகம் ஆகிய வளாகங்களுக்கு உள்ளும் தண்ணீா் சென்று விடுகிறது. அரசு அதிகாரிகள் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்ததால் இதைத் தவிா்க்கவே தளி சாலையில் மழை நீா் தேங்காமல் செல்ல ஏதுவாக பள்ளம் தோண்டப்பட்டு வாய்க்கால் அமைக்கப்பட்டு தற்காலிகத் தீா்வு காணப்பட்டது.

ஆனால் இதுவே தற்போது பெரும் பிரச்னையாக மாறி விட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகப் புகாா்கள் வந்துள்ளன. ஆகவே, தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூடவும், நெடுஞ்சாலைத் துறையிடம் கூறி தளி சாலையில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் தொடரவும் ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com