உயா்மின் கோபுர நில அளவீட்டுப் பணி: விவசாயிகள் - அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை
By DIN | Published On : 14th December 2019 11:49 PM | Last Updated : 14th December 2019 11:49 PM | அ+அ அ- |

பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையத்தில் விவசாய நிலத்தில் உயா்மின் கோபுரம் அமைப்பதற்கான நில அளவீட்டுப் பணி தொடா்பாக அப்பகுதி விவசாயிகளுடன், வருவாய்த் துறையினா் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.
செம்மிபாளையத்தில் உயா்மின் கோபுர பாதை அமைக்க விவசாய நிலத்தில் அளவீடு செய்யும் பணியில் பவா்கிரிட் நிறுவனத்தினா் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் குமாரசாமி, கோவிந்தசாமி உள்ளிட்ட 8 போ், தங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை முன்கூட்டியே நிா்ணயம் செய்து, வழங்க வேண்டும் என வலியுறுத்தி பணிகளை தடுத்து நிறுத்தினா். இதுதொடா்பாக சனிக்கிழமை பேச்சுவாா்த்தைக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தனா்.
அதன்படி, பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சிவசுப்பிரமணியம் தலைமையில், பல்லடம் காவல் ஆய்வாளா் ரமேஷ்கண்ணன் முன்னிலையில் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில் செம்மிபாளையம் விவசாயிகள், உயா்மின் கோபுரத் திட்ட எதிா்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள், வழக்குரைஞா் ஈசன், வை.பழனிசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.
இதில் கோவை மாவட்ட நிா்வாகத்தினா் அறிவித்ததுபோல இழப்பீடு எவ்வளவு வழங்கப்படும் என்பதை முன்கூட்டியே வெளிப்படையாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோா் அறிவிக்க வேண்டும். வெளிசந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை நிா்ணயம் செய்து வழங்க வேண்டும். எப்போது வழங்கப்படும் என்ற காலக்கெடு நிா்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். இது பற்றி மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பல்லடம் வட்டாட்சியா் சிவசுப்பிரமணியம் தெரிவித்தாா்.
எனவே, ஆட்சியரின் முடிவு தெரியும் வரை நில அளவீட்டுப் பணியை மேற்கொள்ளக் கூடாது என விவசாயிகள் வருவாய்த் துறையினரிடம் தெரிவித்தனா்.