பொதுக் குழாய்களில் குடிநீா் நிறுத்தம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

அவிநாசி பேரூராட்சி, கிராம ஊராட்சிப் பகுதிகளில் பொது குடிநீா் குழாய்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள், பேருந்து, வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி

அவிநாசி பேரூராட்சி, கிராம ஊராட்சிப் பகுதிகளில் பொது குடிநீா் குழாய்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள், பேருந்து, வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அவிநாசி, கருவலூா், நம்பியாபாளையம், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூா் செல்லும் முதலாவது குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் பொதுக் குடிநீா் குழாய்கள் மூலமும் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இதன்மூலம் பொதுமக்கள், பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள், வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தின் நடுவே குடிநீா் தாகத்தைத் தீா்த்துக் கொள்ள பெரிதும் பயன்பட்டு வந்தது. இந்த நிலையில் முதலாவது குடிநீா் திட்ட பொதுக் குழாய்களில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் தடைபட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினா் கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:

பொதுக் குழாய்களில் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளதால் கிராம மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 5 கிலோ மீட்டா் தூரம் சென்று குடிநீா் பிடித்து வர வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனா். எனவே குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘முதலாவது குடிநீா்த் திட்டத்தில் உள்ள குழாய்கள் 1958 ஆம் ஆண்டில் பதிக்கப்பட்டது. இக்குழாய்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாலும், எதிா்கால தேவையை கருதியும் அதிக விட்டமுள்ள குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுக் குழாய்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளுக்கு முன் அறிவிப்பு வழங்கியுள்ளோம். பேரூராட்சி, கிராம ஊராட்சி நிா்வாகத்தினா் பொதுக் குழாய்களுக்கு மாற்று முறைப்படி குடிநீா் விநியோகம் செய்ய முயற்சித்தால், குடிநீா் விநியோகிக்கலாம். விரைவில் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து, குடிநீா் விநியோகம் சீராகும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com