தில்லி நட்சத்திர விடுதியில் தீ விபத்து: திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள் இருவர் சாவு

தில்லி கரோல் பாக் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் திருப்பூர் பின்னலாடை

தில்லி கரோல் பாக் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 2 பேர் தீயில் கருகி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
தில்லி கரோல் பாக் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் 60 பேர் தங்கியிருந்தனர். இந்த நிலையில், அந்த விடுதியில் செவ்வாய்க்கிழமை காலை 4.35 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  தீ விபத்தில் சம்பவ இடத்தில்  9 பேரும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 8 பேரும்  என மொத்தம் 17 பேர் கருகி உயிரிழந்தனர்.
தில்லி காவல் துறையினர் விடுதியில் சோதனை நடத்தியபோது திருப்பூரைச் சேர்ந்த இருவர் இந்த விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது.  தீ விபத்தில் அவிநாசி,  வெற்றிவேல் நகரைச் சேர்ந்த எஸ். அரவிந்த் (39), கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த  நந்தகுமார் (33) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் மெர்சன்டைசராக பணியாற்றி வந்துள்ளனர்.  இவர்கள் இருவரும்  தங்கள் நிறுவன வியாபாரம் தொடர்பாக வெளிநாட்டு முகவர்களைச் சந்திக்க  இந்த விடுதியில் தங்கியிருந்தனர்.
இவர்களின் இறப்பு குறித்து திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்துக்கு தில்லி காவல் துறையினர் தகவல் கொடுத்துள்ளனர்.  தில்லியில் உள்ள தமிழக அதிகாரிகள் இருவரின் சடலங்களையும் திருப்பூருக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்தில் இறந்த அரவிந்த் (39) திருப்பூர் மாவட்டம்,  அவிநாசி வட்டம், ராக்கியாபாளையம் வெற்றிவேல் நகரைச் சேர்ந்த சுகுமாரன் மகன் ஆவார். அரவிந்துக்கு மனைவி தேவிகா (32),  மகன் பூஜித் (12) ஆகியோர் உள்ளனர். அரவிந்தின் தந்தை சுகுமாரன் பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார். பூஜித்  அவிநாசி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். 
தீ விபத்தில் உயிரிழந்த நந்தகுமார் (33) கோவை மாவட்டம்,  கருமத்தம்பட்டி, செந்தில் நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ஆவார். நந்தகுமாருக்கு மனைவி சரிதா பேபி, மகன் நித்தி (3)  ஆகியோர் உள்ளனர்.   நந்தகுமார் உயிரிழந்தது தொடர்பான தகவல் அவரது குடும்பத்தினருக்கு செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி அளவில் தெரிவிக்கப்பட்டது. 
நந்தகுமாரின் சகோதரர் கார்த்திக் (40) தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது விடுமுறையில் இங்கு வந்துள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com