பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும்:  உற்பத்தியாளர்கள் கோரிக்கை

பால் கொள்முதல் விலையை உயர்த்தி, உற்பத்தியாளர்களுக்கு கட்டுபடியாகக் கூடிய விலையை வழங்க அரசு

பால் கொள்முதல் விலையை உயர்த்தி, உற்பத்தியாளர்களுக்கு கட்டுபடியாகக் கூடிய விலையை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக போதிய மழைப் பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. விவசாயத்துக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காத சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். 
நெல், கரும்பு, மஞ்சள், வெங்காயம், பருத்தி உள்ளிட்ட தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்குப் பதிலாக மிகக் குறுகிய நாள் பயிர்களையும், காய்கறிப் பயிர்களையும் பயிரிட்டு வருகின்றனர். வருமானத்துக்காக பெரும்பாலான விவசாயிகள் கறவை மாடுகளை வைத்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 உற்பத்தி செய்யப்படும் பால் ஆவின் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
காங்கயம் பகுதியில் மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கொள்முதல் மையங்களும், பல நூறு தனியார் நிறுவனங்களின் கொள்முதல் மையங்களும் செயல்படுகின்றன. பால் உற்பத்தியாளர்கள் உரிய விலை கிடைக்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து மறவபாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் கூறியதாவது : 
பொதுமக்களின் நுகர்வுப் பொருள்கள் தொடர்ந்து விலையேற்றம் கண்டு வருகிறது. தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்குக் கட்டுபடியாகக் கூடிய விலை இல்லையெனில், அவற்றின் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தி விடுகின்றனர். ஆனால், விவசாய விளைபொருள்கள் விலையையும், பால் கொள்முதல் விலையையும் அரசும், தனியார் நிறுவனங்களுமே முடிவு செய்கின்றன. 
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்றுவரை உயர்த்தப்படவில்லை.
எனவே, மாட்டுப் பால் லிட்டர் ரூ. 35 ஆகவும், எருமைப் பால் லிட்டர் ரூ. 60 ஆகவும் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு ஆவின் நிறுவனம் கடந்த 3 வருடங்களாக பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவில்லை. ஊக்கத் தொகையை தாமதம் செய்யாமல் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com