வெள்ளக்கோவிலில் இரவோடு இரவாக வெட்டப்பட்ட மரங்கள்!
By DIN | Published On : 14th February 2019 07:43 AM | Last Updated : 14th February 2019 07:43 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில் திங்கள்கிழமை இரவோடு இரவாக மரங்கள் வெட்டப்பட்டன.
வெள்ளக்கோவிலில், காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் பழயை அரசுக் கட்டடம் உள்ளது. இது தற்போது நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த காலங்களில் பேரூராட்சி அலுவலகம், தீயணைப்பு நிலையம் ஆகியவை இயங்கி வந்த இந்தக் கட்டடம் தற்போது காலியாக உள்ளது. இதனைச் சுற்றிலும் அசோக மரம், பூவரச மரம், வேப் பமரம், சீனிப்புளிய மரங்கள் இருந்தன.
இந்த அரசுக் கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு பின்புறம், பக்கவாட்டில் இருந்த மரங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தனியார் நிலத்துக்குச் செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் கேட்ட போது பதில் கிடைக்கவில்லை. இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருகிலிருந்த பெரிய அரசமரம் மர்ம நபர்களால் வெட்டப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.