உடுமலையில் தேசிய அறிவியல் தின விழா
By DIN | Published On : 25th February 2019 10:24 AM | Last Updated : 25th February 2019 10:24 AM | அ+அ அ- |

உடுமலை: தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திறனறிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
உடுமலை சுற்றுச் சூழல் சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், கலிலியோ அறிவியல் கழகம் ஆகியவை சார்பில் உடுமலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டிகள் நடைபெற்றன. மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு தலைப்புகளின் கீழ் விநாடி-வினா, பேச்சு, ஓவியம், கட்டுரை ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது படைப்பாற்றல்களை வெளிப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து கருத்தாளர் பிரபாகரன் ஏன், எப்படி, என்கிற தலைப்பில் பல்வேறு கருத்தியல் மிக்க மேஜிக் நிகழ்ச்சியை நடத்தினார். இந்திய மருத்துவம், ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர்.சந்தோஷ்குமார் மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினார். பரிசளிப்பு விழாவில் உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.அசோகன் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார். நிர்வாகிகள் கண்ணபிரான், நாகராஜன், சதீஷ்குமார், சசிக்குமார், பொது நல அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
நூலக வாசகர் வட்டக் கூட்டம்:
உடுமலை முதல் கிளை நூலக வாசகர் வட்டக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு, வாசகர் வட்டத் தலைவர் க.லெனின் பாரதி தலைமை வகித்தார். நூலகர் அ.பீர்பாஷா முன்னிலை வகித்தார். இதில், காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாதி தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 5, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை நேர உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் கே.விஜயகுமார், ந.அபிராமி சுந்தரி, கண்டிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் எஸ்.சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.