காங்கயம் புத்தகத் திருவிழா: கலை, இலக்கியப் போட்டிகள்
By DIN | Published On : 25th February 2019 10:22 AM | Last Updated : 25th February 2019 10:22 AM | அ+அ அ- |

காங்கயம் : காங்கயம் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கலை,இலக்கியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
காங்கயம் தமிழ்ச் சங்கம், காங்கயம் நகர ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் காங்கயம் புத்தகத் திருவிழா வரும் ஏப்ரல்12ஆம் தேதி முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை காங்கயம் நகரம் ஸ்ரீமஹாராஜா மஹாலில் நடைபெறவுள்ளது.
புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்குப் பேச்சு, கவிதை, ஓவியம், கட்டுரை ஆகிய போட்டிகள் அறிவுத் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், குறள் தந்த வள்ளுவர், நெகிழியும் நாமும், இணையம் தெளிவோம், பூமியும், வெப்பமாதலும் என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை காங்கயம் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் பா.கனகராசு, நகர ரோட்டரி சங்க நிர்வாகி மா.மோகன்ராசு உள்ளிட்டோர் செய்திருந்தனர். ஆசிரியர்கள் ஆ.கனகராசு, வே.தி.செல்வி, வி.ஜோசப் ஆகியோர் போட்டிகளை முன்னின்று நடத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகத் திருவிழாவின்போது பரிசுகள்
வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.