தையல் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 28th February 2019 08:20 AM | Last Updated : 28th February 2019 08:20 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக முத்தூர் சாலை புதிய பேருந்து நிலையம் அருகில் சங்கத்தின் கொடியேற்றப்பட்டு, கடைவீதி வழியாக உறுப்பினர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.ஆறுமுகம் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினார்.
கூட்டத்துக்கு சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஐ.ஜீவானந்தம் தலைமை வகித்தார். சங்கத்தின் வட்டாரத் தலைவர் ஏ.சரவணன், செயலாளர் வி.சுப்பிரமணியன், துணைச் செயலாளர் என்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சங்கத்தின் மூலம் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள், தொழிலாளர் நலவாரியத்தில் இணைவது, அரசிடமிருந்து கிடைக்கும் பல்வேறு உதவிகள், சங்க உறுப்பினர்களின் செயல்பாடுகள் போன்றவை குறித்து பேசினர்.
சங்கத்தின் வட்டாரப் பொருளாளர் எஸ்.மகேஸ்வரன் நன்றி கூறினார். மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.