சுடச்சுட

  

  நான்கு ஓவன் பைகளுக்கு ரூ.2  ஆயிரம் அபராதம்: வியாபாரிகள் அதிர்ச்சி

  By DIN  |   Published on : 12th January 2019 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பூரில் உள்ள தேநீர் விடுதி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நான்கு நான் ஓவன் பைகளை  மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனர். 
  தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள தேநீர் விடுதிகள், காய்கறி மார்க்கெட்டுகள், இறைச்சிக்  கடைகள், வர்த்தக, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சி, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
  திருப்பூரில் 22 டன் பறிமுதல்:  இதில், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஜனவரி 1 முதல் 10 ஆம் தேதி வரையில் 22 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் நடந்த ஆய்வில் பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ. 2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஒரு சில பகுதிகளில் அரசியல் பிரமுகர்களுக்கு நெருக்கமான கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
  நான்கு நான் ஓவன் பைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்: இந் நிலையில், திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்லடம் சாலையில்வெள்ளிக்கிழமை  ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள தேநீர் விடுதியில் இருந்து தடை செய்யப்பட்ட நான்கு நான் ஓவன் பைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த தேநீர் விடுதி உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தனர். இந்த விடுதியின் அருகில் செயல்பட்டு வந்த மற்றொரு உணவகத்தில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
  இதுகுறித்து சிறு வியாபாரிகள் கூறியதாவது:
  நாங்கள் பொதுமக்களுக்குபிளாஸ்டிக் பைகளில்  பொருள்கள் வழங்குவதில்லை. அதே வேளையில், கடைகளில் மீதம் உள்ள பிளாஸ்டிக் பைககளை குப்பைகளில் போடுவதற்காக வைத்திருந்தோம். அந்த பிளாஸ்டிக் பைகளில் நான்கு பைகளை பறிமுதல் செய்து விட்டு ரூ.2 ஆயிரம் விதிப்பது எந்த வகையில் நியாயம் என்றனர். 
  இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருக்க வேண்டாம் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருள்களை திருப்பி ஒப்படைக்க ஒரு வாரம் அவகாசமும் வழங்கப்பட்டது. இதன் பிறகும் கடைகளில் வைத்திருக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை சோதனை மூலம் பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்து வருகிறோம். இந்த சோதனை மேலும் சில நாள்களுக்குத் தொடரும் என்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai