அமிர்தா விரைவு ரயில் உடுமலையில் நின்று செல்லக் கோரி 20 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகள் ரயில்வேயிடம் ஒப்படைப்பு

திருவனந்தபுரம்-மதுரை விரைவு ரயில், உடுமலை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி, பெறப்பட்ட

திருவனந்தபுரம்-மதுரை விரைவு ரயில், உடுமலை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி, பெறப்பட்ட  20 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகள் மதுரை கோட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருவனந்தபுரம்-மதுரை வரை இயங்கிக் கொண்டிக்கும் அமிர்தா விரைவு ரயில் பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. ஆனால் உடுமலையில் இந்த ரயில் நிற்காமல் செல்கிறது. இந்த ரயில் உடுமலை ரயில் நிலையத்தில் நின்று செல்லத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
உடுமலை வட்டம் 40 கி.மீ. சுற்றளவு கொண்டது. அருகில் மடத்துக்குளம் வட்டம் உள்ளது. இப் பகுதிகளில் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். மேலும் மூணாறு, சின்னாறு, திருமூர்த்திமலை, அமராவதி அணை ஆகிய சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.
உடுமலை வட்டத்தில் ஏராளமான காகித ஆலைகள், நூற்றுக்கும் மேற்பட்ட நார்  தொழிற்சாலைகள், 
ஆயிரக்கணக்கான கோழிப் பண்ணைகளும் செயல்பட்டு வருகின்றன. எனவே அமிர்தா விரைவு ரயில், உடுமலை ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, உடுமலை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களிடம் 1 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று ரயில்வே துறைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதன்படி உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டு வந்தன.
இந்நிலையில் பொதுமக்களிடம் 20 ஆயிரம் கையெழுத்துகள் பெறப்பட்டு, முதல் தவணையாக மதுரை கோட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து உடுமலை ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ஆடிட்டர் ஆர்.கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
அமிர்தா விரைவு ரயில் உடுமலையில் நின்று செல்ல வலியுறுத்தி பெறப்பட்ட 20 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகள், முதல்கட்டமாக மதுரையில் உள்ள மண்டல அலுவலக கோட்ட செயல் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இது குறித்த மனுவும் அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட மேலாளர், அமிர்தா விரைவு ரயில் உடுமலையில் நின்று செல்ல கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தில்லியில் உள்ள ரயில்வே போர்டு அந்த அறிவிப்பை வெளியிட உள்ளது என்றார்.
மேலும் கோவை-பொள்ளாச்சி பயணிகள் ரயிலை பழனி வரை நீட்டிக்க வேண்டும். கோவை-சென்னை விரைவு ரயிலை உடுமலை, பழனி, திருச்சி வழியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவும் மேலாளரிடம் அளிக்கப்பட்டது. இதுபோக உடுமலை ரயில் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்துக்கு அனுமதி வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தப்பட்டது என்றார்.
உடுமலை ரயில் பயணிகள் நலச் சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் வ.கிருஷ்ணன் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com