திருப்பூரில் 41 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்: அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்

திருப்பூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 41 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையை கால்நடை பராமரிப்புத்

திருப்பூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 41 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
திருப்பூர் மண்டலத்தில் திருப்பூர், பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய கிளைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான அரசுப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகின்றது. 
இந் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு 471 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கிவைத்தார். 
இதன்படி திருப்பூர் மண்டலத்தில் இருந்து 41 புதிய பேருந்துகளின் சேவையை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில்,  திருவண்ணாமலை, திருச்சி, வெள்ளக்கோவில், கோவை, சத்தியமங்கலம், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்செங்கோடு, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 41 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது குறித்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 
 77 ஆயிரம் மகளிருக்கு 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்த புதிய பேருந்துகளில்,  திருப்பூர் மண்டலத்தில் 41 புதிய பேருந்துகள் ரூ. 10 கோடி மதிப்பில் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் இரண்டாவது ஆண்டாக அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டைப் பொருத்தவரையில் 146 விண்ணப்பங்கள் அனுமதிக்காக வந்துள்ளன. அதில், 60க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும் என்றார். 
இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார், கரைப்புதூர் ஏ. நடராஜன், திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவண் குமார்,  முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டலப் பொது மேலாளர் (தொழில்நுட்பம்)  வீரமணி, துணை மேலாளர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com