திருப்பூரில் அரசுப் பள்ளிகளில் பொங்கல் விழா கோலாகலம்

திருப்பூர் அரசுப் பள்ளிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவர்கள் பொங்கல் விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினர்.

திருப்பூர் அரசுப் பள்ளிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவர்கள் பொங்கல் விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினர்.
தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தைப் பறைசாற்றும் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் ஆண்டுதோறும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல், நிகழாண்டும் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 
இந் நிலையில் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகைக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.  எனவே திருப்பூரில் உள்ள அரசுப் பள்ளிகளில் பண்டிகைக்கு முன் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மாணவர்கள் பொங்கல் வைத்தும், பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். 
இதில், திருப்பூர், காதர்பேட்டையில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பள்ளிக்கு வந்தனர். மேலும்,  பாரம்பரிய விளையாட்டுகளான உரியடித்தல், கபடி, பூப்பறித்தல், கும்மியாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் பழனிசாமி கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு கடந்த 10 நாள்களுக்கு முன்பே சிறப்பு ஆசிரியர்கள் வைத்து ஒயிலாட்டம் கற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும், நகர்ப்புற மாணவர்களிடையே மறைந்து வரும் தமிழர்களின் கலாசாரமான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக பள்ளிக் கல்வித் துறையிடம் அனுமதி பெற்று இந்த ஆண்டு தல் முறையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனால், மாணவர்கள் பண்டையத் தமிழ் பாரம்பரியத்தை தெரிந்துகொள்வதோடு மாணவர்களின் மன அழுத்தமும் குறையும் என்றார். 
அதேபோல்,  திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கலாசார உடையான சேலை அணிந்து பொங்கல் வைத்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், வண்ண கோலப் போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டனர். 
இதேபோல், காதர்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கலை கொண்டாடினர். அதே போல், வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தாய்த்தமிழ் பள்ளி உள்ளிட்ட  திருப்பூர் மாநகரில் பல்வேறு அரசு, தனியார் பள்ளிகளில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஃபிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் பொங்கல் விழா
திருப்பூரை அடுத்த பெருந்தொழுவில் உள்ள ஃபிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில்  சமத்துவ பொங்கல் தின விழா கொண்டப்பட்டது. 
இதில், மாணவர்கள் வேட்டி, சட்டைகளிலும், மாணவிகள் பட்டு ஆடைகள் அணிந்து பங்கேற்றனர். நொண்டி, கயிறு இழுத்தல், பச்சக் குதிரை போன்று
பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.  இவ்விழாவில்,  பள்ளித் தாளாளர் சிவசாமி, பள்ளிச் செயலாளர் சிவகாமி, மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com