சுடச்சுட

  

  சித்த மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டுத் தமிழர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு: சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை

  By DIN  |   Published on : 13th January 2019 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டுத் தமிழர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
  தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
  கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் மு.தணிகாசலம் தலைமை வகித்தார். 
  மலேசிய அமைப்பாளர் கருடமலைச் சித்தர் அழகர்சாமி, மாவட்டச் செயலர் மு.த.சங்கர் சித்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 
  இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, அக்குபஞ்சர், அக்குபிரஷர், வர்மா உள்ளிட்ட மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் மாற்றுமுறை மருத்துவம் என்று கூறி வருகின்றன. இது வருந்தத்தக்கது. மேற்கண்ட மருத்துவ முறைகளை மாற்றுமுறை மருத்துவம் என அழைக்காமல், இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகள் எனக் குறிப்பிட வேண்டும்.
  தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மொரீஷஸ் உள்ளிட்ட மேலை நாடுகளில் வாழும் தமிழர்களும் சித்த மருத்துவத்தை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் சித்த மருத்துவம் படிக்க விரும்பும் வெளிநாட்டுத் தமிழர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, உலகம் முழுவதும் சித்த மருத்துவம் வளர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  இக்கூட்டத்தில், இந்த இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.மணியன், கொள்கை பரப்புச் செயலர் கி.ஆறுமுகம், மக்கள் தொடர்பாளர் ஜாகீர் உசேன், செயற்குழு உறுப்பினர் பர்கத் நிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai