சுடச்சுட

  

  நொய்யல் ஆற்றில் முறைகேடாக தண்ணீர் எடுத்த 9 பேருக்கு நோட்டீஸ்

  By DIN  |   Published on : 13th January 2019 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சென்னிமலை அருகே இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி நொய்யல் ஆற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு சென்ற 9 பேருக்கு பொதுப் பணித் துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
  சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் சாயக் கழிவுகள் அதிக அளவில் கலந்ததால், அணையைச் சுற்றியுள்ள பகுதி, அணை நீர் சென்ற நொய்யல் ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள விவசாய நிலங்களும் மாசுபட்டன. அதன் பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், கடந்த சில வருடங்களாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்காமல், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 
  நொய்யல் ஆற்றுப் பகுதியில் மின் மோட்டார்களை வைத்து இரவு, பகலாக குழாய்கள் மூலமாக சிலர் தங்களது வயல்களுக்கும், கிணறுகளுக்கும் தண்ணீர் கொண்டு சென்றனர். இந்தத் தண்ணீரில், திருப்பூர் சாயக் கழிவுகள் கலந்துள்ளதால் ஏற்கெனவே சாயக் கழிவாக இருந்த கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவை மேலும் மாசுபட்டு குடிநீருக்கு அவதிப்பட நேரிடும் என பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 
  கிணற்று மின் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தி நொய்யல் ஆற்றில் இருந்து குழாய் வழியாக சாயக்கழிவு கலந்த தண்ணீரை நிலங்களுக்குப் பாய்ச்சுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலத்தொழுவு கிராமத்தில் உள்ள வெங்கமேடு ஊர் பொதுமக்கள் ஈரோடு ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 
  அதன்பேரில், சென்னிமலை பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் சபரிநாதன் மூலம் நொய்யல் ஆற்றில் இருந்து கிணற்று மின் இணைப்பைப் பயன்படுத்தி சட்டத்துக்குப் புறம்பாக தண்ணீர் எடுத்ததாகக் கூறி, ஒரத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கும், கொடுமணல் பகுதியைச் சேர்ந்த 3 பேருக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
  மேலும், ஒரத்துப்பாளையம் நீர்பரப்பு பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் இருந்து எவ்வித அனுமதியும் இல்லாமல் கிணற்று மின் இணைப்பு மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கும் மேற்கண்ட 9 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னிமலை மின் வாரிய உதவி பொறியாளருக்கும் பொதுப் பணித் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai