உணவுக் கடை தகராறின்போது கீழே தள்ளிவிடப்பட்ட மூதாட்டி சாவு
By DIN | Published On : 24th January 2019 01:37 AM | Last Updated : 24th January 2019 01:37 AM | அ+அ அ- |

பல்லடம், வடுகபாளையம்புதூரில் தனியார் உணவு விடுதியில் ஏற்பட்ட தகராறின்போது சமரசம் செய்துவைக்கச் சென்ற மூதாட்டியை கீழே தள்ளிவிட்டதால் அவர் புதன்கிழமை இறந்தார்.
வடுகபாளையம்புதூரைச் சேர்ந்தவர் அப்பாச்சிகவுண்டர் மனைவி கமலாத்தாள் (79). இவருக்கு குழந்தைகள் இல்லை. இவரது கணவர் ஏற்கெனவே இறந்து விட்டார். அதனால், கமலாத்தாள் தனியாக வசித்து வந்தார். இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த நிலையில் வாடகைக்கு விடப்பட்ட உணவுக் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு சிலர் புரோட்டா உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டு விட்டு தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்னையில் சமரசம் செய்துவைக்கச் சென்ற கமலாத்தாளை தகராறில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கீழே தள்ளிவிட்டார். இதனால், மயக்கம் அடைந்த கமலாத்தாள் சற்று நேரத்துக்குப் பிறகு மயக்கம் தெளித்து வீட்டுக்குச் சென்று விட்டார்.
இந்நிலையில், அவர் நெஞ்சு வலிப்பதாக சப்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கமலாத்தாள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி அவரது சகோதரி மகன் கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.