விபத்தில் கால்களை இழந்த இளைஞருக்கு ரூ. 87 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
By DIN | Published On : 24th January 2019 01:39 AM | Last Updated : 24th January 2019 01:39 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே 2015இல் சரக்கு வேன் மோதி இரு கால்களை இழந்த இளைஞருக்கு ரூ. 87 லட்சம் இழப்பீடு வழங்க மக்கள் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் ஈஸ்வரன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் குணால் ஜெயின் (24). இவரது நண்பர் மகேந்திரன் (20). இவர்கள் இருவரும் 2015 ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் பல்லடம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அடிபட்டு மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குணால் ஜெயின் இரு கால்களையும் இழந்துவிட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட இருவரின் பெற்றோர் இழப்பீடு கோரி திருப்பூர் 2 ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கில் மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரசத் தீர்வு காணப்பட்டது. இதில், தனியார் காப்பீட்டு நிறுவனம் குணால் ஜெயினுக்கு ரூ. 87 லட்சமும், மகேந்திரன் குடும்பத்தினருக்கு ரூ. 17 லட்சமும் இழப்பீடாக வழங்க நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் உத்தரவிட்டார். இதையடுத்து, திருப்பூர் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி அல்லி, முகமது ஜியாவுதீன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் 2 குடும்பத்தினரிடம் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கான உத்தரவை புதன்கிழமை வழங்கினர்.