பட்டா நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி  ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்னா

குண்டடம் பகுதியில் உள்ள பட்டா நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர்

குண்டடம் பகுதியில் உள்ள பட்டா நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் சட்டி, பானைகளுடன் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் மக்கள் குறைதீர் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் ஆதித்தமிழர் பேரவையின் மாநகர் மாவட்டச் செயலாளர் வெ.வேந்தன்மகேசு தலைமையில் பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியம், புள்ளகாளிபாளையததில் உள்ள அருந்ததியர் இன மக்களுக்கு 1988 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது. ஆனால், நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
மேலும், எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் குடிசை அமைத்து வசிக்க சிலர் மிரட்டல் விடுப்பதுடன், அடித்துத் துன்புறுத்துகின்றனர். மேலும், எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் தனியார் ஒருவர் கம்பி வேலி அமைத்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொது மக்கள் சட்டி, பானைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது, காவல் துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 
அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி:  நல்லூர் நுகர்வோர் நல மன்றத்தின் தலைவர் என்.சண்முகசுந்தரம் அளித்துள்ள மனு:  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஸ்கேன் எடுப்பதற்காக தனியார் மருத்துவமனை, ஸ்கேன் சென்டருக்கு சென்றால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி திருப்பூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி செய்துதரக் கோரி தமிழக முதல்வர், சுகாதாரத் துறை செயலருக்கு மனு அளிக்கப்பட்டது. எம்ஆர்ஐ ஸ்கேன் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. 
ஆனால், தற்போது வரையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை கோரி மனு:  திருப்பூர், ராயபுரம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆதிதிராவிட நல அலுவலரின் வாகன ஓட்டுநர் விடுதியில் உள்ள மாணவர்களை துன்புறுத்தி வருகிறார்.
அவர் விடுதியிலேயே தூங்குவது, சமைப்பது, இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஆகவே, மாணவர்களை துன்புறுத்தும் வாகன ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை கோரி மனு:  திருப்பூர், கல்லூரி சாலை, ஆவரங்காட்டுத் தோட்டம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் ஆவரங்காட்டுத் தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்த நிலையில், எங்கள் வீடுகளுக்கு மத்தியில் காம்பேக்டிங் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பெரிய அளவிலான பாய்லர் வைத்துள்ளனர். இந்த பாய்லரில் இருந்து எழும் தீப்பொறி எங்கள் வீடுகளின் மீது விழுகிறது. தீப்பொறியில் இருந்து எழும் சாம்பல் துகள்கள் உணவுகளில் விழுவதும், காயப்போடும் துணிகளின் மீதும் படிகிறது. இதனால் மிகவும் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரிடம் புகார் தெரிவித்தால் எங்களுக்கு மிரட்டல் விடுகிறார்.  எனவே, போதிய பாதுகாப்பு இல்லாமல் இயக்கப்படும் பாய்லரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மக்கள் குறைதீர் முகாமில் 42 பயனாளிகளுக்கு ரூ.8.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
குடிநீர் பிரச்னை தொடர்பாக மனுக்களை பெற சிறப்பு ஏற்பாடு:   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்களிடம் இருந்து குடிநீர் பிரச்னை தொடர்பாக மனுக்கள் பெற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு பெறப்படும் மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், சமூகப் பாதுகாப்பு தனி துணை ஆட்சியர் ராகவேந்திரன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com