மனைவியை அரிவாளால் வெட்டியவர் கைது
By DIN | Published On : 05th July 2019 07:14 AM | Last Updated : 05th July 2019 07:14 AM | அ+அ அ- |

திருப்பூரில் குடும்பப் பிரச்னையால் மனைவியை அரிவாளால் வெட்டியவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருப்பூர், அனுப்பர்பாளையம் காயத்ரி நகர் முதல் வீதியில் வசித்து வருபவர் சுந்தர்குமார் (34). இவரது மனைவி முத்துச்செல்வி (28). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு சுந்தர்குமார் தனது மனைவியிடம் தற்போது குடியிருக்கும் வீட்டை மாற்றிவிட்டு வேறு வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறி உள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை முத்துச்செல்வி வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டபோது, சுந்தர்குமார் திடீரென அரிவாளால் முத்துச்செல்வியின் கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சுந்தர்குமார் அரிவாளுடன் 15 வேலம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ரவிக்குமாரிடம் (பொ) சரணடைந்தார். ரவிக்குமார், அவரை 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சுந்தர்குமாரைக் கைது செய்தனர்.