கேரளத்தில் பருவ மழை: கறிக்கோழி விற்பனை மந்தம்

கேரளத்தில் பருவ மழை துவங்கியதால் கறிக்கோழி விற்பனை மந்தமடைந்துள்ளது. 

கேரளத்தில் பருவ மழை துவங்கியதால் கறிக்கோழி விற்பனை மந்தமடைந்துள்ளது. 
 திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலூர், உடுமலை பகுதிகளில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
 இதில் கேரளத்துக்கு மட்டும் தினமும் 3 லட்சம் கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பொதுவாக கறிக்கோழி விற்பனையைப் பொருத்து பல்லடத்தில் உள்ள கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் தினமும் விற்பனை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
 அதற்கேற்ப சில்லறை விற்பனையில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கறிக்கோழி கொள்முதல் விலை சீராக இருந்து வந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை பெய்து வருவதால் அங்கு தட்பவெப்ப நிலை மாறியுள்ளது.
 இதன் காரணமாக கோழி இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது. இதனால் பல்லடம், உடுமலை பகுதியில் கறிக்கோழிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. கொள்முதல் விற்பனை விலையும் படிப்படியாக குறைந்து கிலோ ரூ.72 ஆக உள்ளது.
 இதுகுறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:
 கேரளத்தில் தற்போது பருவ மழை பெய்து வருவதால் கறிக்கோழி விற்பனை குறைந்துள்ளது. மேலும் மழைக் காலம் என்பதால் வேன்களில் கறிக்கோழிகளை கொண்டு செல்லும்போது தொடர் மழையால் கோழிகள் அதிக அளவில் நனைந்து உயிரிழப்பு ஏற்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. மிதமான தட்பவெப்ப நிலை நிலவுவதால் கறிக்கோழிகள் விரைவாக எடை கூடிவிடுகின்றன. ஒரு கோழி குஞ்சு 50 நாள்களில் 2 கிலோ எடைக்கு வளரும் என்ற நிலையில் தற்போது 40 நாள்களிலேயே அந்த எடைக்கு கோழி வளர்ந்து விற்பனைக்குத் தயாராகிவிடுகிறது. இதனால் தற்போது கோழி உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 
 ஒரு புறம் விற்பனை குறைவு, மறுபுறம் உற்பத்தி அதிகரிப்பு என்ற நிலையில் தற்போது கறிக்கோழி பண்ணைத் தொழில் உள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறோம். இதே நிலை நீடித்தால் பண்ணைகளில் கறிக்கோழி உற்பத்தியைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com