கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
By DIN | Published On : 19th July 2019 09:28 AM | Last Updated : 19th July 2019 09:28 AM | அ+அ அ- |

திருப்பூரில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் கள்ளர் தெருவைச் சேர்ந்தவர் சி.அருண்குமார் (21). இவர் திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, மளிகைக் கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, அந்த மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாக அருண்குமார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, உறவினர்கள் தன்னை அழைப்பதால் சொந்த ஊருக்குச் செல்வதாகக்கூறி, அந்த மாணவியைத் திருமணம் செய்துகொள்ள அருண்குமார் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது ஆசிட்டைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.