நாச்சிபாளையத்தில் குடிநீர் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 24th July 2019 09:39 AM | Last Updated : 24th July 2019 09:39 AM | அ+அ அ- |

திருப்பூரை அடுத்த நாச்சிபாளையம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாச்சிபாளையம் ஊரட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிக்கு கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை திரண்டு, காங்கயம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தெற்கு வட்டாட்சியர் மகேஸ்வரன், அவிநாசிபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.