வழிப்பறி செய்தவருக்கு 120 வாரங்கள் கடுங்காவல் தண்டனை
By DIN | Published On : 24th July 2019 09:40 AM | Last Updated : 24th July 2019 09:40 AM | அ+அ அ- |

மூலனூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 120 வாரங்கள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
திருப்பூர் மாவட்டம், மூலனூர், கோனேரிப்பட்டி, நொச்சித் தோட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி செல்வி (24). இவர் தனது மாமியாருடன் கடந்த 2008 மே மாதம் 27ஆம் தேதி கோனேரிப்பட்டி, செம்பாளை பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் செல்வி அணிந்திருந்த 6 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து மூலனூர் போலீஸார் வழக்குப் பதிந்து கரூர், விஸ்வநாதபுரியைச் சேர்ந்த கண்ணையன் மகன் செல்லதுரையை (33) கைது செய்தனர். இவரது கூட்டாளியான அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் தலைமறைவாகி விட்டார்.
இந்த வழக்கு விசாரணை தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சசிகுமார் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். அதன்படி, செல்லதுரைக்கு 120 வாரங்கள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.