Enable Javscript for better performance
பால் கொள்முதல் விலையை  உயர்த்தித் தர கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    காங்கயம், குண்டடம் பகுதியில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் மாடுகளுக்குத் தீவனமின்றி பால் உற்பத்தி குறைந்துள்ளதால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறியதாவது: காங்கயம், குண்டடம் பகுதியில் சமீப காலமாக மழைப்பொழிவு போதிய அளவில் இல்லை. இதனால் மேய்ச்சல் நிலங்களில் போதுமான அளவு புற்கள் வளர்வதில்லை. இதனால் வைக்கோல், சோளத் தட்டு உள்ளிட்டவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி மாடுகளுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. தவிர தவிடு, புண்ணாக்கு, மாட்டுத் தீவனம் உள்ளிட்ட அனைத்தும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
    5 ஆண்டுகளுக்கு முன்பு மூட்டை ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் விற்பனையான பருத்தி விதை, புண்ணாக்கு தற்போது ரூ.1,800 ஆக உயர்ந்துள்ளது. ரூ. 500 முதல் ரூ. 800 வரை விற்பனையான கலப்புத் தீவன மூட்டை தற்போது ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. மழை பெய்து மேய்ச்சல் நிலங்களில் போதிய அளவு புற்கள் வளர்ந்து நிற்கும் காலங்களில் மாடுகள் அதிகளவு பால் கொடுக்கும் என்பதால் ஓரளவு லாபம் கிடைக்கும்.  ஆனால் தற்போது போல வறட்சி காலங்களில் மாடுகள் குறைந்த அளவே பால் கொடுக்கும் என்பதால் கூடுதலாக தவிடு, புண்ணாக்கு, கலப்பு தீவனம் ஆகியவற்றை கொடுக்க வேண்டியுள்ளதால் செலவு அதிகமாகி பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
    தற்போது பால் லிட்டர் ரூ. 23 முதல் ரூ. 25 வரையே கொள்முதல் செய்யப்படுவதால் அதில் வரும் வருமானம் மாடுகளுக்குத் தீவனம் வாங்கக்கூட போதுமானதாக இல்லை. கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பால்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய முதலமைச்சர், பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிப்பதாகக் கூறினார். ஆனால் இதுவரை உயர்த்தவில்லை. எனவே, பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்தி மாட்டுப்பால் விலை லிட்டர் ரூ.30 ஆகவும், எருமைப்பால் விலை ரூ. 40 ஆகவும் அரசு அறிவிக்க வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai