Enable Javscript for better performance
மயானத்தில் உரக்கிடங்கு அமைக்கும் பணி நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர், பெரிச்சிபாளையத்தில் உள்ள மயானத்தில் உரக்கிடங்கு அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் கூறினார். 
    திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் உரக்கிடங்கு அமைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 4ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பெரிச்சிபாளையம் திரு.வி.க. நகர் செல்லும் வழியில் உள்ள மயானத்தில் உரக்கிடங்கு அமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கினர். 
    ஆனால் மயானத்தில் உரக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் உரக்கிடங்கு அமைக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.  இந்த நிலையில், மயானம் அருகே உள்ள தனியார் பள்ளியில் புதன்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன், தேசிய தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
    அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன், பொதுமக்களிடம் பேசியதாவது:  திருப்பூர் மாநகரில் நாள் ஒன்றுக்கு சேகரமாகும் 500 டன் குப்பைகளை ஒரே இடத்தில் போடுவதால் பிரச்னை ஏற்படுகிறது. ஆகவே, 29 இடத்தில் மாநகரப் பகுதிகளில் உரக்கிடங்கு அமைத்து 500 டன் உணவு குப்பைகள் மட்டும் சேகரிக்கப்பட்டு உரமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதில், வீடுகள் அதிக அளவில் இல்லாத இடத்தை தேர்வு செய்து இந்த திட்டத்தை கொண்டு வருகிறோம். ஆனால் இங்கு மட்டும் இப்பகுதி மக்கள் வேண்டாம் என போராட்டம் செய்து வருகிறீர்கள். அதனால் இப்பகுதியில் தற்காலிகமாக இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்படும். மற்ற பகுதிகளில் இந்தத் திட்டம் வெற்றி பெற்ற பிறகு அதைப் பார்த்து இங்கு அமைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இப்பகுதியில் மாற்று இடம் இருந்தால் சொல்லுங்கள். அங்கு உரக்கிடங்கு அமைக்க பரிசீலனை செய்வோம் என்றார். 
    இதையடுத்து, பெரிச்சிபாளையம் மயானத்தில் உரக்கிடங்கு அமைக்கும் பணி  தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai