முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
மக்கள் குறைதீர் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
By DIN | Published On : 30th July 2019 08:35 AM | Last Updated : 30th July 2019 08:35 AM | அ+அ அ- |

மக்கள் குறைதீர் முகாமில் 25 பயனாளிகளுக்கு ரூ. 4.73 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார்.
இதில், திருப்பூர், பெரிச்சிபாளையம் திரு.வி.க.நகர் முதல் வீதியில் வசித்து வரும் காளிமுத்து அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
எனது மகன் சஞ்சய் (13) தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு தற்பொழுதி வீட்டிலேயே முடங்கியுள்ளார். நான் கூலி வேலை செய்து வரும் நிலையில் எனது மகனை அருகில் இருந்து ஒருவர் பராமரிக்க வேண்டியுள்ளது. எனது மகனுக்கு மருத்து உதவி, பராமரிப்பு உதவி கேட்டு மூன்று முறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாற்றுத் திறனாளிக்கான பராமரிப்பு உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, எனது மகனுக்கு மருத்துவ உதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை கிடைக்கவும், அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.
இந்த மனுவைப் பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சக்கர நாற்காலி வழங்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, உடனடியாக சிறுவன் சஞ்சய்க்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
கொடிக் கம்பங்களை
அகற்றக் கோரி மனு: திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
எங்கள் பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடிக் கம்பம் நட்டு கொடியேற்றி உள்ளார்கள். அப்போது, அங்கு ஏற்கெனவே கொடிக் கம்பம் நட்டிருந்த மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு சமூகத்தினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே, இங்குள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவை திருப்பூர் மாவட்ட பொருப்பாளர் எம்.என்.சந்திரன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூர், பலவஞ்சிபாளையத்தில் குறவன் இனத்தைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இதுவரை பட்டா வழங்கப்படாததால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலத் திட்ட உதவி: இந்த முகாமில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் முதல்வரின் பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ. 79 ஆயிரம் மதிப்பில் நவீன செயற்கை அவயங்கள், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, மடத்துக்குளம் ஆகிய வட்டங்கனைச் சேர்ந்த 7 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரம் உள்பட மொத்தம்
25 பயனாளிகளுக்கு ரூ. 4.73 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் விமல்ராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலாவுதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) ஞானசேகரன், மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் பெரியகருப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.