வெள்ளக்கோவிலில் தண்ணீர் கோரி மறியலில் ஈடுபட முயற்சித்த பொது மக்கள்
By DIN | Published On : 24th June 2019 09:23 AM | Last Updated : 24th June 2019 09:23 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் தண்ணீர் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதிக்கு அமராவதி ஆற்றிலிருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்து வந்தது. தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் அறவே கிடைப்பதில்லை. கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் தினமும் 60 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. கொடுமுடி அருகிலுள்ள இச்சிப்பாளையம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் குடிநீர் ராட்சத மோட்டார்கள் மூலம் வெள்ளக்கோவில், காங்கயம் நகராட்சிகள், முத்தூர், மூலனூர் பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மூன்று ராட்சத மோட்டார்களும் ஒருசேரப் பழுதானதால் கடந்த ஒருவார காலமாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அறிவொளி நகர், சீரங்கராயக்கவுண்டன்வலசு சாலை அமராவதி நகரைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் குடிநீர் கேட்டு முத்தூர் பிரிவு நான்கு சாலைச் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபடத் திரண்டனர். இது குறித்து தகவலறிந்த வெள்ளக்கோவில் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, நகராட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமானதால்
நகராட்சி அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை. நகராட்சி அதிகாரிகள் செல்லிடப்பேசி மூலமாக மோட்டார் பழுது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படுமெனவும் தகவல் தெரிவித்தனராம். இதன் பின்னர் போலீஸார் பொதுமக்களைச் சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட வந்தவர்களுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தண்ணீர் லாரிகளைச் சேர்ந்தவர்களும் உடன் வந்திருந்தனர். இதனால், போராட்டத்தை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தூண்டிவிட்டனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.