அவிநாசி அரசு கலைக் கல்லூரி புதிய கட்டடங்கள் திறப்பு
By DIN | Published On : 25th June 2019 08:58 AM | Last Updated : 25th June 2019 08:58 AM | அ+அ அ- |

அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ. 7.97 கோடியில் புதிய கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
அவிநாசி - ஈரோடு சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் இக்கல்லூரிக்கு புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ. 7.97 கோடி மதிப்பில் 3 அடுக்கு புதிய கட்டடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது, கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் 3 அடுக்கு கட்டடத்தை திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரிக் கல்வி துணை இயக்குநர் (பொறுப்பு) முத்துராமலிங்கம் குத்து விளக்கேற்றி இனிப்பு வழங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) குலசேகரன் நன்றி தெரிவித்தார்.
இதில் கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.