400 ஆண்டுகள் பழைமையான நடுகற்கள் அவிநாசி அருகே கண்டுபிடிப்பு

அவிநாசி அருகே பெரிய ஒட்டபாளையத்தில் 400 ஆண்டுகள் பழைமையான கால்நடை மேய்க்கும்போது

அவிநாசி அருகே பெரிய ஒட்டபாளையத்தில் 400 ஆண்டுகள் பழைமையான கால்நடை மேய்க்கும்போது மாண்ட வீரர்களின் நடுகற்களை திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர் செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து நடுவச்சேரி செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய ஒட்டபாளையத்தில் திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய பொறியாளர் சு.ரவிகுமார், க.பொன்னுசாமி, ரா.செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கால்நடைகளை மேய்க்கும்போது புலி தாக்கி மாண்ட வீரர்களின் 2 நினைவு நடுகற்களை கண்டறிந்தனர். 
இதுகுறித்து மையப் பொறியாளர் சு. ரவிகுமார் கூறியதாவது: 
கொங்கு மலைப் பகுதிகளிலும், சமவெளிகளிலும் கால்நடை வளர்ப்பே இன்றுவரை வாழ்வாதாரமாக உள்ளது.  இங்கு  கிடைத்துள்ள முதல் நடுகல் 100 செ.மீ. உயரமும், 50 செ.மீ. அகலமும் உடையதாகும். 2 ஆவது நடுகல் 90 செ.மீ. உயரமும் 50 செ.மீ. அகலமும் கொண்டதாகும். 
இந்த இரு நடு கற்களிலும் வீரனின் அள்ளிமுடிந்த குடுமி இடதுபுறம் சாய்ந்துள்ளது. வளர்ந்து தொங்கும் காதில் உள்ள குண்டலம் வீரனின் தோள்களைத் தொட்டவாறு உள்ளது. வீரர்கள் கழுத்தில் கண்டிகை, சரப்பளி வகை அணிகலன்களும், தோள்மீது  மாலையும் முழங்கையில் கடகவளை, மணிக்கட்டில் வீரக்காப்பும், கால்களில் வீரக்கழலும் அணிந்து அழகு ஓவியமாகக் காட்சியளிக்கின்றனர். 
இரு வீரர்களுமே இடையில் மட்டும் ஆடை அணிந்து, அவர்களை இடதுபுறம் தாக்கும் புலியை வணங்கும்படி இந் நடுகற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை கொங்கு மண்டலத்தில் கிடைத்துள்ள பெரும்பாலான நடுகற்களில் வீரர்கள் தங்கள் கையிலுள்ள குறுவாள் அல்லது ஈட்டி மூலம் புலியைத் தாக்கும் வண்ணம்தான் கண்டறியப்பட்டன. ஆனால், இந்த இரு நடுகற்களிலும் ஆயுதங்கள் இல்லாமல் வீரர்களின் வலதுபுறம் கவைக்கோல் காட்டப்பட்டுள்ளது. 
கால்நடைகளை மேய்க்கும்போது அவற்றின் உணவுக்காகக் காட்டிலுள்ள செடி, கொடிகளை வெட்டுவதற்காகக் கையில் கவைக்கோலுடன் மேய்ப்பவர்கள் செல்வதை  நாம் இன்றும் பார்க்க முடிகிறது. இதன் மூலம் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் கால்நடை மேய்க்கும்போது தங்கள் இன்னுயிரை ஈத்தவர்களுக்கு  நடுகற்கள் எடுக்கும் வழக்கம் இருந்துள்ளதை நாம் அறிய முடிகிறது. இந்த நடுகற்களில் எழுத்துப் பொறிப்புகள் இல்லை. சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இவை சுமார் 400 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com