வருவாய்த் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd March 2019 09:40 AM | Last Updated : 02nd March 2019 09:40 AM | அ+அ அ- |

வட்டாட்சியர்கள் மாவட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக உள்ள வட்டாட்சியர்களை மாவட்ட மாறுதல் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் 9 வட்டாட்சியர்கள் மாவட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர், பணியில் இருந்து வெளிநடப்பு செய்து திருப்பூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே.தயானந்தன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ச.முருகதாஸ், மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன், மாவட்ட துணை தலைவர்கள் பி.சண்முகவடிவேல், வாணி லட்சுமி ஜெகதாம்பாள், வட்டாட்சியர்கள் ரமேஷ், சிவகுமார், ராஜகோபால், விவேகானந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சதீஷ்குமார் நன்றி கூறினார்.