சுடச்சுட

  

  வியத்நாமில் தொழில் தொடங்க திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு

  By DIN  |   Published on : 17th March 2019 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  வியத்நாம் நாட்டில் தொழில் துவங்க திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு அந்த நாட்டு தொழில்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
  உலகின் பின்னலாடை உற்பத்தியில் முன்னணியில் உள்ள வியத்நாம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடிக்கு ஆடை உற்பத்தி செய்து, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.  தற்போது சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்கும் விதமாக வியத்நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. துணிகளுக்கு சாயமிடும்போது வெளியேறும் கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து வெளியேற்றும் முறையை அறிந்துகொள்ள, திருப்பூரில் இயங்கும் பொது சுத்திகரிப்பு நிலையங்களின் தொழில்நுட்பங்களைப் பார்வையிட வியத்நாம் நாட்டின் அரசுத் துறை செயலாளர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழுவினர் திருப்பூருக்கு சனிக்கிழமை வந்தனர். இக்குழுவினர் சாய ஆலைகள், பொது சுத்திகரிப்பு நிலையங்களைப் பார்வையிட்டு தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்றனர்.
  இதைத் தொடர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்துக்கு ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம். சண்முகம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் விஜயகுமார், ஆம்ஸ்ராங் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வர்த்தக ஆலோசகர் ஜெயகுமார் வரவேற்றார்.
  இதில், பங்கேற்ற வியத்நாம் தொழில் துறையினர் கூறியதாவது: 
  திருப்பூர் சாய ஆலைகள், பொது சுத்திகரிப்பு நிலையங்களைப் பார்வையிட்டோம். இதில் சாயக்கழிவு நீரை பூஜ்ய விகித சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை அறிந்தோம். இந்த தொழில்நுட்பத்தை வியத்நாம் நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளோம். வியத்நாம் நாட்டில் தொழில் தொடங்கும் நபர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு வரிகள் எதுவும் இல்லை. அடுத்த 9 ஆண்டுகளுக்கு 10 சதவீதம் வரி மட்டுமே வசூலிக்கப்படும். ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.50க்கு வழங்கப்படும். தொழில் துவங்க கடன் வசதி, இடம் ஆகியவை வழங்கப்படும். ஆர்வம் உள்ள திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் அரசுத் துறை சார்பில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றனர். இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai