சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி: கிலோ ரூ.15க்கு கொள்முதல்: விவசாயிகளுக்கு பாதிப்பு

சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு, செலவு செய்த பணத்தை எடுக்க முடியுமா என கவலை அடைந்துள்ளனர்.


சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு, செலவு செய்த பணத்தை எடுக்க முடியுமா என கவலை அடைந்துள்ளனர்.
காங்கயம், தாராபுரம், குண்டடம், உடுமலை, பெரியபட்டி, பல்லடம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம் திருச்சி, கோவை, மதுரை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
கடந்த கார்த்திகையில் நடவு செய்யப்பட்ட வெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. உழவு, உரம், பாத்தி கட்டுதல், விதை, நடவுக் கூலி, அறுவடைக் கூலி என ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். நன்றாக விளைந்தால் ஏக்கருக்கு 8 முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் சீதோஷ்ண நிலை, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இந்தப் பகுதிகளில் 5 முதல் 7 டன் வரையே மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
வெங்காயம் தரமானதாக இருந்தால் தற்போது கிலோ ரூ.15 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இரண்டாம், மூன்றாம் தர வெங்காயம் கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் குறைவான மகசூல் பெற்ற விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருவதாகக் கூறுகின்றனர்.
இது குறித்து சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி தர்மராஜ் கூறியதாவது:
சின்ன வெங்காயம் பயிரிடுவதற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். ஆனால் மகசூல் சரியாகக் கிடைக்காததால் நடப்பு பருவத்தில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இந்நிலை தொடருமானால்,  பெரும் நஷ்டம் ஏற்படும். வரும் காலங்களில் வெங்காயத்துக்கும் குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணயம் செய்யவேண்டும். அப்போதுதான் வெங்காய விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
இதுகுறித்து வெங்காய வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:
நடப்பு பருவத்தில் தமிழகத்தில் அதிக அளவில் வெங்காய சாகுபடி இல்லை என்ற போதிலும் ஏற்கெனவே வியாபாரிகள், விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான டன் வெங்காயத்தை இருப்பு வைத்துள்ளனர்.  அவை இனிமேலும் சேமித்து வைத்தால் தாங்காது என்ற சூழலில் விற்பனை செய்துவருகின்றனர். 
இதுதவிர தற்போது கர்நாடக மாநிலம், மைசூரிலிருந்து வெங்காயம் வந்துகொண்டிருப்பதால் விலை சரிந்து விட்டது. அடுத்த மாதம் வரை விலை கூட வாய்ப்பில்லை. மைசூர் வரத்து நின்றால் மட்டுமே விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com