கேத்தனூரில் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் அமைக்க 4 ஏக்கர் இடம் தேர்வு
By DIN | Published On : 24th March 2019 03:23 AM | Last Updated : 24th March 2019 03:23 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே உள்ள கேத்தனூரில் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் அமைக்க 4 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பல்லடம் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி, விசைத்தறியாளர்களின் பங்களிப்புடன் பொது பயன்பாட்டு மையம் அமைக்க கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.
தற்போது கேத்தனூரில் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயலாளர் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
கேத்தனூரில் 4 ஏக்கரில் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நில மாற்றம் கட்டட அனுமதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறப்பட்டவுடன் மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அரசு நிதியுதவியுடன் இயந்திரங்கள் நிறுவும் பணிகள் தொடங்கும். விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்றார்.