படியூர், சிவன்மலை பகுதிகளில் பலத்த வெடி சப்தம்: நில அதிர்வு என பொதுமக்கள் அச்சம்
By DIN | Published On : 28th March 2019 09:20 AM | Last Updated : 28th March 2019 09:20 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே படியூர், சிவன்மலை பகுதிகளில் புதன்கிழமை காலை ஏற்பட்ட பலத்த வெடி சப்தத்தால் நில அதிர்வாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
படியூர், பெருமாள்மலை, சிவன்மலை, ஊத்துக்குளி, நாச்சிபாளையம் உள்ளிட்ட சுமார் 20 கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணியளவில் பலத்த வெடி சப்தம் கேட்டது. சப்தம் கேட்ட சில விநாடிகளில் நில அதிர்வு போல வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் அதிர்வில் நகர்ந்தன. மேலும் வீடுகளில் வேயப்பட்டிருந்த தகர சீட்டுகளும் அதிர்ந்தன.
இதனால் சிவன்மலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் இருந்தவர்கள் அச்சத்தில் வெளியே ஓடி வந்தனர். வாணவேடிக்கை வெடிகளோ, கல் குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிகளோ இவ்வளவு அதிர்வு ஏற்படும் வகையில் சப்தம் எழுப்ப வாய்ப்பில்லை.
இது தொடர்பாக வருவாய்த் துறையினர் அந்தப் பகுதிகளில் விசாரணை நடத்தினர். இந்த வெடி சப்தத்தினால் காங்கயம், சிவன்மலை, படியூர், ஊத்துக்குளி பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...