பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 05th May 2019 03:39 AM | Last Updated : 05th May 2019 03:39 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் ஜூன் 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29இல் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுதாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணை பொதுத் தேர்வு ஜூன் 14 இல் தொடங்கி 20 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
எனவே, திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமாக ரூ. 125, ஆன்லைன் கட்டணமாக ரூ. 50 என மொத்தம் ரூ. 175- ஐ பள்ளிகளில் செலுத்த வேண்டும்.
இதையடுத்து, தேர்வுக்கான அனுமதிச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து அனுமதிச்சீட்டில் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...