சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
By DIN | Published On : 15th May 2019 09:11 AM | Last Updated : 15th May 2019 09:11 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மாரபாளையம் கிராமத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து மாரபாளையம் கிராம மக்கள் கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப் பகுதியில் இரு குடிநீர் தொட்டிகள் இருந்தும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போதும் வரும் குடிநீர் மிகவும் உவர்ப்புடன் உள்ளது. ஆனால் அருகில் உள்ள வேங்கிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு கொடுமுடி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் சுகாதாரமான குடிநீர் கிடைக்கிறது. ஆகவே, எங்களது கிராமத்துக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
இதையடுத்து, வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் பொது மக்கள் மனு அளித்தனர்.