கனரா வங்கி இலவச தொழில் பயிற்சியில் சேர நாளை நேர்காணல்
By DIN | Published On : 16th May 2019 08:38 AM | Last Updated : 16th May 2019 08:38 AM | அ+அ அ- |

திருப்பூர் அனுப்பர்பாளையம் கனரா வங்கி சார்பில் நடத்தப்படும் காகித உறை மற்றும் பைல் தயாரிப்புக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (மே 17) நேர்காணல் நடைபெறுகிறது.
இது குறித்து கனரா வங்கியின் தொழில் பயிற்சி மைய இயக்குநர் தர்மலிங்கம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர்-அவிநாசி சாலை அனுப்பர்பாளையம், கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் 30 நாள்கள் அழகுக் கலைப் பயிற்சி மற்றும் காகித உறை, காகித பைல் மற்றும் காகித கைவினைப் பொருள் உற்பத்தி செய்வதற்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் எழுதப் படிக்கத் தெரிந்த 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சிக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை. மதிய உணவும் வழங்கப்படுவதுடன், பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
இதில் சேருவதற்கான நேர்காணல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 0421- 225 6626, 99525 18441 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.