கோயில் திருவிழாவில் கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி மனு
By DIN | Published On : 16th May 2019 08:39 AM | Last Updated : 16th May 2019 08:39 AM | அ+அ அ- |

திருப்பூரில் கோயில் திருவிழாவில் கலவரத்தை துண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக திருப்பூர் ஊத்துக்குளி சாலை, பாளையக்காடு, வடக்கு ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் மேற்கண்ட முகவரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளிகளாக வேலை செய்து வருகிறோம். இந்த நிலையில், ஆர்.எஸ்.புரம் பிரதான வீதியில் பிள்ளையார் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் கடந்த ஆண்டுகளில் சொந்த வீட்டுக்காரர்கள் மற்றும் வாடகை வீட்டுக்காரக்கள் ஒன்றாக சேர்ந்து சித்திரை முதல் தேதியில் திருவிழா நடத்தினார். இந்த நிலையில், தற்போது கோயில் அருகில் சொந்த வீடுகளில் வசிக்கும் 13 பேர் எங்களது விருப்பப்படிதான் திருவிழாவை நடத்துவோம் என்று சாவியைக் கொடுக்காமல் தகராறு செய்தனர்.
இதுகுறித்துக் கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும், அவர்களை நாங்கள் தாக்கியதாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் காவல் துறையினர் எங்களது வீடுகளில் சோதனை நடத்தி சரவணசெல்வன் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், எங்களது குழந்தைகள் மீதும் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்து தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.